Subscribe

BREAKING NEWS

30 June 2017

யுகங்களைக் கடந்த ஏக புஷ்பம் திருத்தியமலை


அங்கிங்கெனாதபடி எங்கும் வீற்றிருந்து, தம்மை நாடிவரும் அடியார்கள் குறைகளைத் தீர்ப்பவன் பொன் னார் மேனியனான சிவபெருமான். அவனுக்கு   ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றில் ஒரு நாமம் ‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’. இந்தத் திருப்பெயரோடே ஈசன் அமர்ந்து அருளும் தலமே திருத்தியமலை. இதன் பழைய பெயர் திருத்தேசமலை.  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளதுதான் திருத்தியமலை. இது சிறு குன்று. தலைக்காவிரியில் இருந்து இந்த திருத்தியம லைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம் அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருள்கிறாள், தாயினும் நல் லாள். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும்.




படியேறிச் சென்றால் தெய்வானையுடன் அழகன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் சத்ருகளை அழித்துக் காப்பாற்றுபவர். நீதிமன்ற வழக்குகளில்   வெற்றிபெற இவரை சரணாகதி அடையலாம். செவ்வாய், சஷ்டிகளில் இவரை தரிசித்தால் சத்ருகளால் வரும் தொந்தரவுகள் நீங்கும்.அதிகார நந்தி, அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் இறைவனை தரிசிக்கிறது. இத்திருக்கோயில்   ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் இந்த இறைவனுக்கு ஏன் வந்தது? அதற்குச் சுவையான வரலாறு ஒன்று காலங் காலமாய் கூறப்பட்டு வருகிறது.














இறைவனால் படைக்கப்பட்ட மலர்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் சில இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ஆனால், ஒரு மலரை இறைவனே   காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அந்த மலர் தான் ‘தேவ அர்க்கய வள்ளிப்பூ’. இது எங்கே பூக்கிறது? மரத்திலா? செடியிலா? கொடியிலா? இல்லை. ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே முறை பூக்கும்! இந்தச் சிறப்பு மிக்க சுனை அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை. சுனையில் வற்றாத நீர் உள்ளது. இப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர்.இந்தப்பூ மலர்ந்து இறைவனிடம் சேர்வதைப் பார்க்க விரும்பினார், பிருங்கி முனிவர். அந்த அருமையான நேரத்தை நோக்கி தவமிருந்தார். இந்த  மலையில் பல கிளிகள் இருந்தன. அவற்றுக்கு இப்பூ பூக்கும் நேரமும் காலமும் தெரியும். அந்த விவரத்தை அவை தமக்கிடையே பேசிக்கொள்வதை  பிருங்கி முனிவர் கவனித்தார். விவரமும் புரிந்துகொண்டார். அப்போதிலிருந்து அந்தக் கிளிகளையும் கவனித்து வந்தார். அந்தப் புனிதமான நேரமும்  வந்தது. சுனையில் தோன்றிய சங்கு போன்ற தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது. இவ்வரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார்.







அவரையும் கிளிகளையும் தன்னடி சேர்த்தருள் செய்தார் இறைவன்.இந்தக் கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. கிளிகளோடு பிருங்கி முனிவர், அகத்தியர்-லோபாமுத்ரா போற்றி வணங்கிய ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயின் நல்லாளையும் நாமும் தரிசித்து நற்ப லன் பெறுவோம். இத்தலம் திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது



இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சங்கள்;


 

   சிவநேயச் செல்வர்களே எம்பெருமான் திருவருள் கொண்ட இடம் திருத்தியமலை.
    தேவ அர்க்க வல்லி புஷ்பத்தை சூடிக் கொண்ட ஸ்தலம்.
    பிருங்கி, அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்ட ஸ்தலம்.
    சூரியன் தனித்து வழிபட்ட ஸ்தலம்.
    எம்பெருமான் திருசெம்பொன்மேனி.
    கிரி சுயம்பு மூர்த்தி.
    முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு தேவசேனாவை மணந்த ஸ்தலம்.
    அம்பிகை தாயினும் நல்லாள்.
    22 படிகள் தாண்டி திருமலை மேல் அமர்ந்த ஸ்தலம்.
    ஸ்தலவிருட்சம் வில்வ மரம்.
    தனித்த சுனைநீர் தீர்த்தம்.
    தட்சிணாமூர்த்தி பாத தரிசன ஸ்தலம்.
    பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்து இணைத்து வைக்கும் ஸ்தலம்.
    நக்ஷத்திர தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.

ஸ்தல வரலாறு





ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் “தேவ அர்க்கவல்லி” என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். எல்லா முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியை தேர்வு செய்து அம்மலரைக் காணவேண்டி கேட்டுக்கொண்டனர்.


அவ்வாறே பிருகு மகரிஷியும் அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்து சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.


அச்சமயத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தனர். பிருகு மகரிஷி , அகத்திய முனிவரிடம் “தேவ அர்க்கவல்லி” மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்தார். மீண்டும் பிருகு மகரிஷி சிவலோகத்திற்கு சென்று தாம் அம்மலரைக் காணவேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.


சிறிது காலத்திற்கு பிறகு, பிருகு முனிவர் மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு இருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில இரகசியங்களை கேட்டறிந்தார்.


அச்சமயத்தில் மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும், பறவைகளும் இல்லையென்றும் எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக, லோபமாதாவிடமும், பிருகு முனிவரிடமும் கூறினார்.


அவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் “ஓம் நமச்சிவாய” என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.


அகத்திய முனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர் ஆதலால் “தேவ அர்க்கவல்லி” பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாகவும் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.


அகத்திய முனிவர் முதன் முறையாக பிருகு முனிவரையும், லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்ற போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.


இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர். விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு , இறுதியாக கி.பி.1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.



இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள், சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.

இத்திருக்கோயில் திருச்சியில் இருந்து 35கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி, மூவானூர் வழியாகவும், முசிறியில் இருந்து தண்டலைப்புத்தூர் வழியாகவும் சென்றடையலாம். சமயபுரத்திலிருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி வழியாகவும் சென்றடையலாம்.

நன்றி:-தினகரன்.காம்.(உதவி,திருமதி,ரமா சங்கர்.)

29 June 2017

தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா?


இன்றைய பதிவில் ஒரு தன்னம்பிக்கை  ஊட்டும் கதை ஒன்றை பார்க்க இருக்கின்றோம்.பதிவின் இறுதியில் சில டிப்ஸ் கொடுத்துள்ளோம். அனைவரும் படித்து, பயன் பெறவும்.

இந்த கதையை படித்துப் பாருங்கள். விதி,மதி,நம்பிக்கை என நாம் சொல்லும் காரணங்களின்  மற்றோரு பரிமாணம் புரியும்.தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடவும்.



ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில்  சில தவறுகளால்  நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய்விட்டார்.பின்பு   அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில்  அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

 அதற்கு

இவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கையை பிசைந்து கொண்டே பேசினார்.

எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றார் அந்த பெரிய மனிதர்.




உடனே அவர் "50 கோடி ரூபாய்" என்றார்

அப்படியா, நான் யார் தெரியுமா? என்று கேட்டார் அந்த பெரிய மனிதர்.பின்பு அவரே
அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

 அசந்து போனார் அந்த நிறுவனத்தின் தலைவர்,

சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

 பின் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி

"இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு  அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம்  கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த  வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை  இவர் கைகளில் திணித்து விட்டு சென்றார் அவர்.

500 கோடி செக் தன கையில் வந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.அப்படியே செக்கை தன் பையில் வைத்து விட்டு நேரே அலுவலகம் சென்றார். அலுவலகம் செல்லும் வழியில் மனதிற்குள் சில பல திட்டங்களை தீட்டினார்.




 அந்த  நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று  அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது  உதவியாளரை  அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர  ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

  இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500  கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி  ஏற்பட்டது? எதனால் எதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது  நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேலைகள் வேகமாக  நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து  ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு,மூச்சு,செயல் சிந்தனை,தூக்கம் என அனைத்தும் அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

 மிக சரியாக  ஒரு  வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியாக  550 கோடி ரூபாய்கள்  லாபம் ஈட்டி இருந்தது அந்த  நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த  செல்வந்தர் கொடுத்த  500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த  பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில்  அமர்ந்தார்.

காலை நேரம். ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம்  கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும்  அவருக்கு அருகில் அவரை கைகளால்  பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.  சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த  செல்வேந்தரை காணவில்லை.

 இவர் சென்று அந்த பெண்மணியிடம் "

எங்கே அம்மா தங்கள் கூட வந்தவர்?" என்றார்

 அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "

உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்

இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார். அவர்.

அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி  இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய  செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்.

  ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. தூக்கி வாரிப்போட்டது போன்ற உணர்வு. பின்பு அப்படியே யோசிக்க ஆரம்பித்தார்.அப்போ நம்மால்  முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி  இருக்கிறது என்று நினைத்தார்.




எதையும்  நம்மால் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

என்ன நட்புக்களே? சரிதானே ! அவர் தம்மால் முடியும் சென்று நினைத்தார்.அதனால் அவரால் வெற்றி பெற முடிந்தது.துவண்டு கிடக்கும் போது அவர் கொண்ட தன்னம்பிக்கை அவரை உயர்த்தியது.இங்கே செக் ஒரு தூண்டுகோலாக அமைந்தது. ஒரே கதையில் ஏகப்பட்ட நீதிகள்.

நமக்கு தாலாட்டு வேண்டுமா? இல்லை தேசிய கீதம் வேண்டுமா? நீங்களே முடிவு செய்து தேசிய கீதம் இயற்றுங்கள்.

தன்னம்பிக்கை வளர்க்க சில டிப்ஸ்.

விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள். தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை.

துவண்டு போவதில்லை. தோல்வியானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள். தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.

உங்கள் பலம், பலவீனம் இவைகளைச் சரியாகப் பட்டியலிடுங்கள். உங்கள் வாய்ப்பு களையும் அவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளையும் பட்டியலிடுங்கள். நீங்கள் பட்டியலிட்டுள்ள பலவீனங்களில் சிலவும், தடைகளில் சிலவும் உண்மையிலேயே பலவீனமோ அல்லது தடையோ அல்ல என்பதை உணரலாம். எஞ்சியுள்ள பலவீனங்களையும், தடைகளையும் வெல்வதற்குண்டான முயற்சியில் முழுமூச்சுடன் இறங்குங்கள். இதற்கு உங்கள் பலங்களையும், வாய்ப்புகளையும் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் பயன் படுத்துங்கள்.

இவ்வாறு உங்கள் பலத்தைக் கூட்டி, பலவீனத்தைக் கழித்து, வாய்ப்பினைப் பெருக்கி, தடைகளை வகுத்தால் தன்னம்பிக்கை தானாக வளரும். பலவீனங்களைக் குறைத்துத் தடைகளைத் தகர்க்கும் போது உங்கள் பலங்களும், வாய்ப்புகளும் தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகப்படுத்தும். இந்த தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கைத் தேர்விலும் ஜொலிக்க முடியும்.

எங்கோ படித்த கதை தான் .சிற்சில மாற்றங்கள் செய்து இங்கே பதிவிட்டிருக்கின்றோம்.

- நன்றி 

உண்மையான பக்தி எது?



அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது.

“இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”

“அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.

“என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.

“நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான்.



அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கண்ணன் முடிவு செய்தான்.

“அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!” என்று கண்ணன் அழைத்தான்.

“இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு!” என்றான்.

சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டுச் சென்றனர்.

மூதாட்டியின் வீட்டில் மூன்று கத்திகள்

பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள்.

“தாயே! நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?” என்று கேட்டான் கண்ணன்.

“உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம்!” என்றாள் பிங்கலை .

பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும், சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும், பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. “தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?” என்று கண்ணன் கேட்டான்.

“என்னுடையவைதான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டும். அதன் பொருட்டுத்தான் இந்தப் பூஜை!”

“யார் அந்த விரோதிகள் தாயே?”

“குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும்தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!”. அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?”

“குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?”

“பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?”

“கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?”

“அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?”

“அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்துக் கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!”

அர்ச்சுனன் முந்தானையால் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன்.

“தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்”

பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள்.

அடுத்து கண்ணன் தொடர்ந்தான்.

பாஞ்சாலியை மன்னித்த பாட்டி

“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமேயானாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!” என்றார்.

பிங்கலை இரண்டாவது கத்தியையும் கீழே வீசிவிட்டாள்.

“போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும்!” என்றாள்.

“சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,” என்றான் கண்ணன். அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”

“நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ, மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு. கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்.” என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள்.

பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.



நன்றி :தி ஹிந்து (உதவி திருமதி,ரமாசங்கர்)

28 June 2017

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி

வெள்ளியங்கிரி யாத்திரையின் தொடர்ச்சிப் பதிவாய்..


வெள்ளிங்கிரியின் இரண்டாம் மலையிலிருந்து மூன்றாம் மலை ஏற தொடங்குகின்றோம்.அதாவது
பாம்பாட்டி சித்தர் குகையில் சித்தர் தரிசனம் முடித்து மூன்றாம் மலை ஏற உள்ளோம். இந்த மூன்றாம் மலையானது நம் உடலில் உள்ள மணிபூரகம் சுரப்பியை குறிக்கின்றது.இந்த மலையானது அக்னி அம்சமாக உள்ளது.

மற்ற இருமலைகளை பற்றியும் இதே போல் குறிப்பால் உணர்வோமா?

முதல் மலையானது பிரணவ சொரூபம்.வெள்ளி விநாயகர் உறைவிடம். விநாயகரை தரிசித்தோம் அல்லவா? அதே தான். எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி பெற வெற்றி நாயகன் விநாயரை வழிபட்டு தான் அனைத்து செயலையும் ஆரம்பிப்போம்.அதே போன்ற நிகழ்வு தான் இங்கே முதல் மலையில்.

இரண்டாம் மலையானது நம் உடலில் உள்ள சுவாதிஷ்டானம் என்ற ஆதார சக்ரத்தைக் குறிக்கும்.அதென்ன சக்கரம்? என்று யோசிக்க வேண்டாம்.இது யோக மார்க்கம் சம்பந்தப்பட்டது.சித்தன் அருளால் இனிவரும் பதிவுகளில் யோகம் பற்றி அறியலாம்.இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டாம் மலை நம் உடலில் உள்ள சுவாதிஷ்டானம் தொடர்பு கொண்டது.இங்கே பாம்பாட்டி சித்தர் குகை உண்டு.

சரி வாருங்கள் ! பயணத்தை தொடர்வோம்.

மூன்றாவது மலையில் கற்களும்,பாறைகளும் உண்டு.சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். சில இடங்களில் பாறைகளில் படிக்கட்டுகள் போன்று அமைத்துள்ளனர்.இங்கே பார்த்து நடக்க வேண்டும்.ஏனெனில் மூங்கில் பிரம்பை கொண்டு இங்கே ஊன்றி நடக்க இயலாது.மெதுவாக படி என்ற வேண்டும். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம்.நீரின் சலசலப்பில், வழுக்கு பாறை மீது கவனமாய் ஏற வேண்டும்.






மேலே நீங்கள் காண்பது வழுக்குப் பாறை.




மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. 

ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். 





மூன்றாவது மலையில் வழுக்குப் பாறை அமைத்தவர்களுக்கு மனதில் நன்றி கூறிக் கொண்டே யாத்திரையைத் தொடர்ந்தோம். கால் வலி ஆரம்பித்து விட்டது. இரண்டாம் மலையில் சற்று ஓய்வு எடுத்தோம்.பின்பு அப்படியே தொடர்ந்தோம்.மனதிற்குள் சிவ நாமம் கூறிக் கொண்டே நடக்கலானோம். மூன்றாவது மலை ஏற,ஏற பசியும் எடுக்க ஆரம்பித்து விட்டது. மூன்றாம் மலையில் கை  தட்டி சுனை வரும். அங்கு குடிக்க தண்ணீர் கிடைக்கும். ஆதலால் மூன்றாம் மலையில் சாப்பிடலாம் என முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.

சாதாரணமாக நடக்கும் போதே சற்று கால் வலி இருக்கும்.இப்போது பசியும் கூட சேர்ந்து கொண்டது.இன்னும் மூன்றாம் மலை இறுதி அடைய எவ்ளோ தூரம் செல்ல வேண்டுமோ ? என்று திகைப்பில் வெள்ளியங்கிரி ஈசன் மேல் பாரத்தை போட்டு விட்டோம்.

இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை. இங்கே சொல்லப்படுகின்ற குறியீடுகள் அனைத்தும் நம்முடைய கவனத்திற்காகவே. சற்று தொலைவே..இதோ வந்து விட்டது 


இங்கே அமர்வதற்கு வசதியாய் சில பாறைகள் இருந்தது. அப்படியே சற்று அமர்ந்து ஓய்வு எடுத்தோம்.கை தட்டி சுனை இருந்தது. கை தட்ட,தட்ட சுனையின் நீரின் வேகம் மாறும் என்றார்கள்.ஆனால் அப்படி அங்கு இல்லை.சுனை நீரை பிடித்தோம்.  சிறிது குடித்தோம். என்ன குளிச்சி..என்ன சுவை..இது தான் உண்மையான நீர் என்றே தோன்றியது. அப்படியே யோசிக்கும் போது,தினமும் நாம் குடிக்கின்ற பில்டர் தண்ணீர், குப்பி தண்ணீர் இவை எல்லாம் நீரா? இல்லவே இல்லை நீர் போன்ற ஒரு திரவம். என்ன சொல்ல? நொந்து கொண்டோம்.

பின்பு உணவு பொட்டலங்களை எடுத்து,சாப்பிட தொடங்கினோம். சிறிது மழையும் தூறியது.தூறல் மழையில், குளிர் காற்றில், நல்ல மண் வாசனையோடு இரு உணவு பொட்டலத்தில் ஒன்றை எடுத்து பிரித்தால் அது தயிர் சாதம்.சொல்லவும் வேண்டுமா? அப்படியே எடுத்து சாப்பிட தொடங்கினோம்.



கை தட்டி சுனை நீர் 

சாப்பிட்டு விட்டு கை தட்டி சுனை சென்று,குடிக்க நீர் பிடித்துக் கொண்டோம்.இப்போது மணி சுமார் 3 மணி ஆகிவிட்டது. நாங்கள் போட்ட திட்டம் அன்றைய இரவே ஏழாம் மலை சென்று ஈசனை தரிசித்து,அங்கேயே தங்கிவிட்டு மறு நாள் காலை மலை இறங்கலாம் என்பது. ஆனால் நடப்பவை நம் கையிலா உள்ளது? அவன் அருள் இன்றி எதுவும் நடக்குமா என்ன? அப்படியே சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.



நேரம் வேறு சென்று கொண்டே இருக்கின்றது. வாருங்கள் 4 ம் மலை நோக்கி நகர்வோம் என்று அனைவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம்.ஒருவிதமான கோரை புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்ற என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.

4ம் மலை முழுதும் திருநீர் மலை தான். சாரல் மழை வேறு ஆரம்பித்து விட்டது. அப்படியே சென்று கொண்டு இருக்கும் போது, கால்கள் வழுக்க ஆரம்பித்து விட்டது. மலை ஏற்றம் என்பதால் ஏறவும் முடியவில்லை.சில இடங்களில் பீதியை கிளப்பிவிட்டது.சற்று தட்டுத் தடுமாறி ஏறிக்கொண்டே இருந்தோம்.ஓரிடத்தில் வழுக்கி விட்டது. மேற்கொண்டு ஏறவும் முடியவில்லை.

அப்போது மேலிருந்து கீழே இறங்கும் நண்பரிடம்,சற்று கை பிடித்து மேலே தூக்கி விடுங்கள் என்றோம். அவர் தூக்கி விட்டு விட்டு,இங்கேயே இப்படி என்றால், போக போக கடின மாச்சே என்றார். அப்படியே மனதில் ஒரு நடுக்கம்.ஆயினும்.ஈசன் துணை இருக்க பயம் எதற்கு ? என்று நினைத்து நான்காம் மலை ஏறிக்கொண்டே இருந்தோம்.

நான்காம் மலையில் இந்த திருநீர் மலையை கடந்து, உச்சிக்கு சென்று கொண்டிருக்கின்றோம். எனக்கு முன்னாள் 4 பேர் சென்று விட்டார்கள். என்னுடன், பயண அவசியம் குழுவின் அன்பர் திரு அருணாந்த ஸ்வாமிகள் வந்து கொண்டிருந்தார். மழை வெளுத்துக் கட்டியது. இங்கே முழுதும் கற்களால் ஆனா படிக்கட்டுகள் இருந்தது.அப்படியே ஓரிடத்தில் ஓரமாக நின்று விட்டோம்.அப்போது மேலிருந்து கீழே இறங்குபவர்களை பார்த்தோம். விடாத மழையிலும் பயமின்றி இறங்கி கொண்டே இருந்தனர்.

சற்று ஆசுவாசப்படுத்தி விட்டு, அப்படியே தொடர்ந்தோம். நான்காம் மலையின் முடிவிற்கான பகுதியை நெருங்கி விட்டோம்.எமக்கு முன்னே சென்ற நால்வரும் நின்று கொண்டிருந்தனர்.அவர்களில் இருவர் வாருங்கள் கீழே இறங்கலாம் என்றனர்.ஏனெனில் மலை உச்சி, சாரல் மலை,கடுங் குளிர் என அனைத்தும் ஒன்று சேர்ந்து விட்டது.

அனைவரும் வந்து சேர்ந்த பின்னர், நாலு மலை ஏறிவிட்டோம்..தயை கூர்ந்து மேலே செல்வோம்.இவ்ளோ  தூரம் வந்தாச்சு. வாங்க போகலாம் னு சொல்லிட்டு அப்படியே நாலாவது மலையிலே நடக்க ஆரம்பித்தோம்.

சிர் ..சிர் ..என்ற அடர்ந்த காற்றின் சப்தம், வெளுத்து வாங்கும் மழை..மேற்கொண்டு எங்களால் நடக்க முடியவில்லை.அங்கே ஒரு கடை இருந்தது.கடைக்கு எதிரே இருந்த மறைப்பில் சற்று அமர்ந்தோம்.நடுங்கும் குளிரில் ..தலை முதல் கால் வரை நடுக்கம் தர ஆரம்பித்து விட்டது.இனிமேல் நடக்க இயலாது.பக்கத்தில் எங்காவது தங்கி விட்டு, மறு நாள் காலை யாத்திரையைத் தொடர்வோம் என முடிவெடுத்தோம். இது தான் ஈசனின் துணை என்பது.

நாங்கள் ஏழாவது மலை சென்று அங்கு இரவு தங்க ஏற்பாடு செய்தோம்.ஆனால் நான்காம் மலையில் நாங்கள் தங்க ஏற்பாடானது.நாங்கள் செய்த புண்ணியம்...நல்ல வேளை ..அங்கே பக்கத்திலேயே ஒரு தற்காலிக கூடாரம் ஒன்று இருந்தது.அங்கே இரவு தங்கலாம் என்று அங்கே சென்றோம்.

அங்கே கிடைத்த அனுபவங்கள், ஈசன் தரிசனம் என அனைத்தும் அடுத்த பதிவில்.

முந்தைய பதிவுகளுக்கு:



- ஐந்தாம் மலை யாத்திரை தொடரும்.




27 June 2017

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு

அன்பார்ந்த மெய்யன்பர்களே

இந்த வாரத்தின் மகிழ்ச்சியின் தொடக்கமாக நம் TUT குழுவின் உழவாரப்பணி நடைபெற உள்ளது. அவன் அருளாலே அவர் தாள் வணங்கி இரண்டாம் முறையாக உழவாரப் பணி செய்ய இறையருள் கூட்டுவித்துள்ளது. முதல் உழவாரப்பணி யின் அனுபவ பகிர்வும், சதானந்த ஸ்வாமிகள் பற்றியும் இன்றைய பதிவில் காண்போம்.

சித்துக்கள் பல புரிந்த சிறப்பு மிகு சித்தர் வரிசையில் சதானந்த ஸ்வாமிகளுக்கு சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.  தர்மமிகு சென்னை என்றொரு அடையாளம் சென்னைக்கு உண்டு. தர்மமிகு சென்னையில் பெருங்களத்தூரில் கோவில் கொண்டு,வருகின்ற பக்தர்களின் சங்கடங்கள் தீர்த்து,நல் ஆசி வழங்கி வருகின்றார் சதானந்த ஸ்வாமிகள்.இன்றுள்ள சதானந்த புரமும் அவரின் பெயராலேயே வழங்கப்பட்டு வருகின்றது.

இயற் பெயர் :   காசி நாதன்
அவதரித்த ஊர் : தஞ்சாவூர்

சிறு வயது முதலே இறை நம்பிக்கை கொண்டு வளர்ந்தார். திருவிடைமருதூரில் உள்ள சுயம்பிரகாச சுவாமிகளிடம் தீட்சை பெற்றார்.சதானந்த புரம் உருவாக்க சென்னை வந்து சேர்ந்தார்.இச் சித்தர் தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். சீடன் தயாரானதும் தன் அருள் நிலைகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகின்றார்.

சுவாமிகள் தம் காலில் யாரும் விழுந்து வணங்குவதை விரும்ப மாட்டார்.இவருடைய முகம் எப்போதும் பொலிவுடன் காணப்படும்.சுவாமிகள் தம் வழியில் பல சீடர்களை உருவாக்கி,சிலருக்கு ஜீவ சமாதி மூலம் முக்தி அடையும் அருள் வழங்கி உள்ளார்கள் என்பது இவரின் சித்த நிலையை வெளிப்படுத்தும்.நவகண்ட யோகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியவர் நம் சுவாமிகள்.

செம்பாக்கத்தில் உள்ள பொன்னம்பல சுவாமிகள்,புரசைவாக்கம் குயப்பேட்டை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள்,கரபாத்திர சுவாமிகள்,வீர சுப்பையா சுவாமிகள்,மயிலாப்பூர் குழந்தைவேல் சுவாமிகள் போன்றோருடன் சுவாமிகள் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம சுவாமிகள் கதை (PDF) 






மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.

தீராத தோஷங்களை தீர்க்கும், தீவினைகளை அகற்றும், நவக்கிரகங்களை சாந்தி செய்யும், ஜென்ம ஜென்மங்களாக தொடர்ந்து வரும் பாவங்களை துடைத்தெறியும்…. உழவாரப்பணியின் சிறப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவிலில் 05/06/2016 அன்று உழவாரப் பணி செய்தோம்.









முதலில் நானும்,வம்சியும் இணைந்து விநாயகர் சன்னிதியை சுத்தம் செய்தோம்.பின்பு என் அண்ணன் சந்திரசேகரன் வந்து முருகர் மற்றும் ஐயப்பன் சன்னிதிதியை சுத்தம் செய்தார்.சற்று நேரத்தில் அரவிந்த் & பாலாஜி இணைந்து சிவ பெருமானின் தளத்தை எடுத்துகொண்டு சரபேஸ்வரர்,அன்னை காளிகாம்பாள் சன்னதி என்று ஒரு கை பார்த்து விட்டனர்.

இறுதியாக ஆனந்த் வந்து இணைந்து, கோவிலின் மேற்புறம் இருந்த ஒட்டடை அடித்தார்.

நிகழ்வின் இறுதியாக, அம்மனிற்கு பட்டுடுத்தி வணகினோம்.நம் குழுவின் உறுப்பினர்கள் அனைவரின் பெயரில் அர்ச்சனை செய்து,பிரசாதம் பெற்றோம்.

அவர் அருளாலே ..அவர் தாள் வணங்கி இத்தகைய சிறப்பு மிக்க பணியில்,தன்னை இணைத்து கொண்ட அனைவருக்கும் நன்றி.


அனைவரின் பார்வைக்காக நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வண்ணப்படங்கள்











உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு அறிவிப்பு:

ஏவிளம்பி வருட ஆனி மாதசித்திரை நட்சத்திர நாளில் (02/07/2017) ஞாயிற்றுக்கிழமை அன்று நம் குழுவின் சார்பாக உழவாரப் பணி மற்றும் கூட்டு வழிபாடு பெருங்களத்தூர் அருகில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற உள்ளது.இறை அன்பர்கள் தங்கள் வருகையை 7904612352 /  96772 67266⁠ எண்களில் உறுதி செய்யவும்.மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.



அனைவரும் வருக ! இறை அருள் பெறுக !!

சதானந்த சித்தரின் அருள் பெற - முந்தைய பதிவில்


23 June 2017

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.


அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனிபோல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல்  வேண்டும் அன்னாய்.
- மகாகவி பாரதியார்.








வேத மந்திரங்கள்,நீதி நூல்கள்,பாரதியாரின் பாடல்கள் முதலியன ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் கொண்டது.இந்த நூல்களை கேட்பதும்,படிப்பதும்,மனனம் செய்வதும் பலன் தரும். இவை அனைத்தும் ‘’பாஸிட்டிவ் திங்கிங்’’ மூலம் ‘ஒளிமயமான எதிர்காலம்’ தரவல்லது.நாம் தினசரிப் பிராத்தனைக்காக கண்டிப்பாக ஒரு பாடலை இணைக்க வேண்டும் என்று தோன்றியது. அது சமயம் தேடலில் ஈடுபட்ட போது நமக்கு கிடைத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,பாரதியார்.









இவர்கள் மூவரும் சொல்லாத கருத்துக்களா ? நீதிகளா? நாம் தினமும் "வாயில்  தோறும் வள்ளுவம் "  தலைப்பில் தினம் ஒரு திருக்குறளை முக நூலில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.கீழ் உள்ள இணைப்பில் சென்றால் இதுவரை பதிவிட்டுள்ள குரல்களை காணலாம்.

நம் குழுவின் முகநூல் - http://facebook.com/thedalullathenikalaai/


 ஔவையார் கூறிய நீதிகளும் வேறொரு பதிவில் தொடர்வோம். மீதம் இருப்பது மீசைக் கவி பாரதி மட்டுமே.அவரின் துணியை போது கிடைத்த பாடல் தான் "எண்ணிய முடிதல் வேண்டும்" என்பது.இந்த பாடலை அனைவரும் தினசரி பிரார்த்தனையில் சேர்க்கவும்.மேற்கொண்டு அப்பாடலை பற்றி அடியேனுக்கு தெரிந்த சிறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம்.




எண்ணிய முடிதல் வேண்டும் என்ற கருத்தை ஒட்டிய குட்டிக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

இந்திரன், தேவலோகத்திலிருந்து, பூமிக்கு வந்தான்;  எதற்கு வந்தான் என்று பார்க்கின்றீர்களா  கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான்!

ஒரு காட்டின் வழியே சென்றான்,அப்போது தனது தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்யும் ஒருவன் ஒரு மரத்தின் அடிப்பகுதியாக மாறிவிட்ட காட்சியைக் கண்டான். அவன் இன்னும் தவம் செய்துகொண்டிருந்தான். இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி  பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று சோகமாகக் கேட்டான். உடனே இந்திரன், இன்னும் பத்து ஆண்டுகள் ஆகுமென்றான். அவன், இன்னும் பத்து ஆண்டுகளா? என்று கேட்டான். கேட்ட மாத்திரத்தில் அவன் நரகத்துக்குப் பறந்து போய்விட்டான்.

இந்திரன், அதே காட்டில், தொடர்ந்து பயணம் செய்கையில் இன்னுமொரு காட்சியைக் கண்டான். தனது தவறுகளுக்காக வருந்தும் வேறு ஒருவன், ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஆன்மீக தாகம் இருந்தது. இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று இந்திரன் சொன்னான்.
ப்பூ ! வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா! என்று சொல்லிக்கொண்டே தாவிக்குதித்து மரத்தைச் சுற்றினான். அடுத்த நொடியில் அவன் ராக்கெட் வேகத்தில் சுவர்க்கத்துக்குப் போய்விட்டான்.

கண்ணன் கூறுவான்:–

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன (பகவத் கீதை 6-5)


தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக்கொள்ள வேண்டும்; தன்னையே தாழ்த்திக்கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே ஒருவனுக்கு உறவினன்; தானே ஒருவனுக்குப் பகைவன் (பகவத் கீதை 6-5).

கதை ஒன்றைப் பார்த்தோம்.இனி சற்று அந்த பாடலின் வரிகளை அறிவோம்.




இந்தப் பாடல் ஒரு முக்கியமான பாடல். பாரதியாரின் தீர்க்கதரிசனத்தை உணர்த்தும் பாடல்.அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தில் என்ன  எண்ணி இருப்பார் ? சுதந்திரம் வேண்டும்  என்று தானே? அவர் எண்ணி கிடைக்காமல் போய் விடுமா? இதோ கிடைத்து விட்டது. ஆம்! சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம். இந்த ஒன்று போதாதா? "எண்ணிய முடிதல் வேண்டும் " என்ற பாடலின் உதாரணத்திற்கு,

இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்.மேலோட்டமாக  பாடலின் நுட்பம் நமக்கு தெரியாது.வேண்டும்...வேண்டும் ..என்று கேட்பதாக தோன்றும்.ஆனால் கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு வரியும் அடுத்த வரியுடன் தொடர்பு கொண்டவை.இந்த பாடல்  பூக்கள் அன்று.பூக்களால் தொடுக்கப் பட்ட பூச்சரம் இது.

நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய உயர் எது? என்று கேட்டால் என்ன சொல்வது? வள்ளுவர் தான் சொல்லிவிட்டாரே ! பின்பு மறு பேச்சு உண்டா?  குளத்தில் உள்ள தாமரைப் பூவின் உயரம் என்பது குளத்தின் நீரின் உயரம்.அது போல் நம்முடைய உயரம் நம் உள்ளத்தின் உயரம்.

உள்ளத்தில் இருந்து என்ன வெளிப்படுகிறது ? எண்ணங்கள் தான். எனவே நாம் எண்ணும் எண்ணங்கள் நடந்து முடிக்க வேண்டும் என்பது இங்கே முதல் வரிக்காக விளக்கம்.மனித வாழ்க்கையே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்ட கட்டடம் அன்றி வேறில்லை.

அப்படியே அடுத்த வரிக்கு செல்வோம். நல்லவே  எண்ணல் வேண்டும்; இரு வரிகளையும் பொருத்திப் பாருங்கள். நினைக்கின்ற அனைத்து  செயல்களும் நடக்க வேண்டும். பொதுவாக நினைப்பவை நடக்க வேண்டும் என்றால், நல்லதும் நினைக்கலாம்,தீமையும் நினைக்கலாம்.
அப்படி நல்லன நினைப்பது நமக்கும் நல்லது,பிறருக்கும் நல்லது.சில நேரங்களில் நல்லன நடக்காது போகலாம். ஆனால் நாம் தொடர்ந்து நல்லன எண்ணிக் கொண்டே இருத்தல் வேண்டும். எனவே தான் அடுத்த வரியாய் நல்லவே எண்ணல் வேண்டும் என்கின்றார்.

இப்போது "திண்ணிய நெஞ்சம் வேண்டும்" என்கின்றார். ஏன் நெஞ்சம் வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். வெறும் நெஞ்சம்/உள்ளம் எப்படிப்பட்டது தெரியுமா? அது நல்லன,அல்லன என இரண்டையும் தரும். நாம் ஏற்கனவே சொல்லியது போல், நல்லவே எண்ண வேண்டும் என்றால் உறுதியான நெஞ்சம் அல்லவா வேண்டும். நாம் சில நல்ல விசயங்களை நினைக்கின்றோம்.அது நடக்காது போகின்றது.உடனே என்ன செய்கின்றோம் ? தீயன மெல்ல மெல்ல உள்ளே வருகின்றது ? ஏன் வருகின்றது ? உறுதியற்ற உள்ளமாய் உள்ளதால் தானே? உள்ளம் உறுதியானால் நல்லன வரும். எண்ணும் எண்ணம் யாவும் ஈடேறும் என்பது தெளிவல்லவா !

உள்ளம் உறுதியானால் போதுமா? அடுத்து வருகிறார்  "தெளிந்த நல்லறிவு வேண்டும்;" என்று. நாம் நினைக்கின்ற எண்ணங்களின் பிறப்பிடம் நமது உள்ளம். அந்த உள்ளம் உறுதியாய் இருக்க வேண்டும்.ஆயினும் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் நமக்கு நன்மையா ? தீமையா? என்பது நம் அறிவிற்கு தானே தெரியும். அந்த அறிவு நூற்களை கற்று வரலாம், தற்போது "Google Search" ல் வருகின்ற காலம். அனுபவத்தில் வரலாம். செய்யும் செயல்கள் வெற்றி பெறுவது நம்முடைய அறிவினால் தான்.இதை  உணர்ந்ததால் தான் வேதாத்திரி மகரிஷி அறிவிற்கு கோவிலாய் "அறிவுத் திருக்கோயில் " கட்டினார் என்பது தெளிவாய்ப் புரிகின்றது.கீழ்க்கண்ட கவியைப் படியுங்கள்.உண்மை புரியும்.

“அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்விறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதனை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.”



அடுத்த நான்கு வரிகள் தான் இந்தப் பாடலின் கருப்பொருளை நமக்கு உணர்த்துகின்றது.முதல் நான்கு வரிகளை மட்டும் எடுத்து  பொருள் கொண்டால் நமக்கு மேம்போக்காகத் தெரியும்.அடுத்த நான்கு வரியில் தான் பாடலின் உண்மைப் பொருளை வைத்துள்ளார்.



 இத்தனையும் இருந்தால்தான் நாம் நினைத்தது கைகூடும். சில சமயம் அவைகள் கூடாமலும் போகலாம். எண்ணியவை நல்லனவாகவே இருக்கலாம். தெளிந்த அறிவால் நம் நெஞ்சம் உறுதியாக இருக்கலாம் ஆனால் ஏதோ ஒன்று நாம் நினைப்பதை நடக்கவிடாமல் தடுக்கிறது. அது நாம் பண்ணிய பாவம்.

மனிதனாகப் பிறந்தாலே பாவங்கள் செய்யாமல் இருக்க முடியாது. மனித ஜன்மமே நாம் பாவங்கள் செய்ததால்தான் எடுக்கிறோம். வினைப் பதிவே பல தேகம் கண்டாய் ...பாவங்கள் கூடலாம் இல்லை குறையலாம், ஆனால் பாவங்கள் செய்யாமல் உலக உயிர்கள் ஜனிப்பதில்லை. ஆசையால் பாவமும் பாவத்தால் பிறப்பும் மனித வாழ்க்கையில் சுழலும் வட்டங்கள். அதற்காக பாவ விமோசனமே இல்லை என்று சொல்லமுடியாது.

சூரியன் முன் பனித்துளி எவ்வாறு ஆவியாகிவிடுகிறதோ அதேபோல் இறைவன் எனும் மகா சூரியன் முன் நின்று கண்ணீர் விட்டு கதறும்போது நாம் செய்த பாவங்கள் தொலைந்துவிடுகின்றன என்கிறான் பாரதி.எனவே நாம்  பாவங்கள் அழிய ...இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுவோம். ஏன் கதறி அழ வேண்டும்.யோசித்துப் பாருங்கள்.இந்த ஒரு நாளில் நாம் எவ்வளவு பாவம் செய்திருப்போம் என்று. ஒரு நாள்  கணக்கே சொல்லி மாளாது எனில் இந்தப் பிறவியில் பிறந்த நாள் முதல் இன்று வரை ? அப்பப்பா அழத் தோன்றுகின்றதா ?

அப்படி என்றால் இதற்கு முந்தைய பல பிறவிகள்.கதறி அழத் தோன்றுகின்றது தானே?

பதிவை ஒட்டியே இது நாள் வரை நாம் என்னென்ன பாவங்கள் செய்திருப்போம் என்று வள்ளலார் பட்டியலிடுகிறார்.ஒரு முறை அல்ல பல முறை படித்துத்தான் பாருங்களேன். உங்களுக்கே உண்மை புரியும்.


நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தேனோ !

வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ !

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ !

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தோனோ !

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ !

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ !

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ !

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ !

உயிர்க் கொலை செய்வோருக்கு உபகாரஞ் செய்தேனோ !

களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ !

பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ !

ஆசை காட்டி மோசம் செய்தேனோ !

வரவு போக்கொழிய வழியடைத்தேனோ !

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ !

பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ !

இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ !

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ !

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ !

கற்பழிந் தவளைக் கலந்திருந்தேனோ !

காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ !

கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ !

கருப்ப மழித்துக் களித் திருந்தேனோ !

குருவை வணங்கக் கூசி நின்றேனோ !

குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ !

கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ !

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ !

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ !

கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ !

ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ !

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ !

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ !

குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ !

வெயிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ !

பகை கொண்டு அயலோர் பயிர் அழித்தேனோ !

பொது மண்டபத்தைப் போயிடித் தேனோ !

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ !

சிவனடியாரைச் சீறி வைதேனோ !

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ !

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ !

தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ !

தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ !

இதில் எந்தப் பாவத்தையும் நாம்  இனிமேல் செய்யாமல் இருப்போம்! செய்த பாவத்திற்கு இறைவனிடம் வேண்டுவோம்.

ஆக, இறைவன் முன் நம் பாவங்கள் நீங்கிவிடும்போது, நமக்கு நல்லறிவு கிடைக்கும். நல்லறிவால் மன வலிமை உண்டாகும். மன வலிமையால் நாம் நல்லனவே நினைப்போம். நல்லன எண்ணும்போது, நாம் எண்ணியன நடப்பதில் தடையேதும் இல்லை.

 அன்பர்களே, இந்த மகத்துவம் மிக்க பாடலை தினமும் உங்கள் பிரார்த்தனையில் சேர்த்து வேண்டுங்கள்.கண்டிப்பாக ஒரு மாதத்திற்குள் மாற்றத்தை உணர்வீர்கள்.இந்த பாடல் சிறந்த சுயமுன்னேற்ற சிந்தனையை தூண்டும் பாடல்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே  எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனிபோல,
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல்
 வேண்டும் அன்னாய்.


மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

அன்பு உள்ள வீட்டில் லக்ஷிமி தங்குவாள்.


பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.


ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.



*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?



கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!

வேண்டாம் இந்தச் சூதாட்டம்என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்

என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.



"
பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,




அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.


"
துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட 
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
 
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற  துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது  பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

"
அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.

"
கேள்" என்றான் கண்ணன்.

"
அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"

புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;

அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.

"
நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க  வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.

"
உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக  முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
 
ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை

அதுதான் பகவானின் மேன்மை!
---------------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்,


நன்றி:-திருமதி,ரமாசங்கர்.