Subscribe

BREAKING NEWS

30 January 2018

வாழ வழி காட்டும் குருவே வருக (அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 01/02/2018)

மெய்யன்பர்களே.

வருகின்ற 01/02/2018 அன்று காலை 9 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு நம் "தேடல் உள்ள தேனீக்களாய்" குழுவின் மூலம் ஆயில்ய ஆராதனை நடைபெற உள்ளது, அன்பர்கள் கலந்து கொண்டு, சித்தர்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.



நம் குழுவின் ஆண்டு விழா நிகழ்ச்சியை யொட்டி ,சில ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். எனவே பதிவுகள் எதுவும் அளிக்க முடியவில்லை. சென்ற வாரம் வேளச்சேரி குருநானக் கல்லூரி ஆன்மிக கண்காட்சிக்கு சென்றோம். விரைவில் மற்றொரு பதிவில் தங்களிடம் பேசுகின்றோம். இதோ ஏற்கனவே நடைபெற்ற பூசையின் போது, அருள் வழங்கிய அகத்தியர் தங்களின் பார்வைக்காக












25 January 2018

தேடல் உள்ள தேனீக்களாய் - இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் சில நிகழ்வுகள் நம்மையறியாது நம்முள் சிலவற்றை நிகழ்த்தும். அது போன்ற ஒரு பயணமே தேடல் உள்ள தேனீக்களாய் குழு, அதன் சேவைகள், தளப் பதிவுகள் என்று. இங்கே நாம் நம்மைப் பற்றிய சுய புராணம் பாட விரும்பவில்லை. ஆனால் நாம் எப்படி தேடல் உள்ள தேனீக்களாய் குழுவில் பயணத்தை தொடர்ந்து வருகின்றோம் என்ற நினைவுகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நானும் எனது அலுவலக நண்பர்களும் இணைந்து, பிப்ரவரி மாதம் அன்னதானம் செய்ய முற்பட்டோம், உடனே எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தோம். அலுவலக நண்பர்களின் உதவியுடன் சுமார் 10 உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து, கடவுளின் ஆசி பெற்று, கூடுவாஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நேரில் சென்று, உணவின்றி இருப்பவர்களுக்கு கொடுத்தோம். மன நிறைவாய் இருந்தது. இதே போல் தொடர்ந்து அன்னசேவை செய்தோம். அடுத்து வந்த நிகழ்வுகளில், உணவகங்களில் 5 இட்லி, 1 வடை, தண்ணீர் பாக்கெட் என தயார் செய்து கொடுத்து வந்தோம்.

நாம் கூடுவாஞ்சேரி வந்து சுமார் இரண்டாண்டு கடந்த நிலையில், இங்கே வள்ளலார் கோயில் இருப்பது பற்றி அறியவில்லை. ஆனால் முதல் அன்னசேவை முடித்து செல்லும் போது, வள்ளலார் கோயில் கண்ணில் தென்பட்டது. அருட்பெருஞ்ஜோதியை வழிபட்டு, அங்கே நடைபெறும் அன்னசேவை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோம். உறவுகளின் உதவி அதிகமாய் இருந்த போது, இங்கே அன்னசேவை செய்தோம்.

மாதங்கள் செல்ல,செல்ல உழவாரப் பணி செய்ய விரும்பினோம். உடனே குருவின் அருளினால் பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் எங்களால் இயன்ற அளவில் உழவாரப் பணி செய்தோம்.முதன் முதலாக செய்த உழவாரப் பணி, உள்ளத்தில் இன்னும் தித்திப்பாய் உள்ளது. சுமார் 10 பேர் கொண்ட குழுவில் இறங்கி பணியை செய்தோம். அடுத்த அன்னசேவையை வள்ளலார் நெறி பரப்பும் கொளப்பாக்கம் சந்தானம் ஐயா மூலம் திருப்போரூர் முருகன் கோயிலில் செய்தோம்.

அடுத்த அன்னசேவை கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் என தொடர்ந்தது. பின்னர் இங்கிருந்து தான் பிருகு மகரிஷியின் அருளும்,சித்தர்களின் வழிகாட்டலும் தொடங்கியது.

மாதம் மாதம் அன்னசேவை மட்டும் தொடர்ந்து கொண்டே வந்தது. அப்போது அகத்தியர் லோபாமுத்ரா கல்யாண தீர்த்தம் கோயில்,அத்ரி மலை செல்ல வழிகாட்டல் கிடைத்தது. இதில் சில அகத்திய அடியார்கள் நம்முடன் இணைந்தார்கள். அருமையான தரிசனம், அகத்தியரின் அன்பில் திளைத்த தருணம் என உணர்ந்தோம்.

பின்னர் பெருங்களத்தூரில் உள்ள ஆதீஸ்வரர் சேவை நிறுவனம் சென்று, அவர்களுக்குத் தேவையான பாத்திரங்கள், காய்கறிகள் என வாங்கி கொடுத்தோம், அங்கிருக்கும் ஒரு சிறுமி பள்ளிக்கட்டணம் செலுத்தினோம். இந்த கால கட்டத்தில் அன்னசேவையானது நாம் வழக்கமாக செய்யும் நேரடி வழங்குதல், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் என தொடர்ந்தது. புதியதாக புழக்கத்தில் வந்த ரூ.2000 வந்ததும் நாம், நம் தளம் சார்பாக செய்த முதல் காரியம். அன்னசேவைக்காக கொடுத்ததே.இது போல் இன்னும் இன்னும் ஏகப் பட்ட தருணங்கள்.

2017 ஆண்டு பொங்கல் முடித்து, அப்படியே இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாட நினைத்தோம். இதனை மரம் நடு விழாவாக செய்ய குருவின் அருள் கிடைத்தது. வார்தா புயலும் வெளுத்து வாங்கி விட்டதால், நம்மால் இயன்ற விழிப்புணர்வை திரு.முல்லைவனம் ஐயா அவர்களோடு செய்ய முற்பட்டோம். நாட்கள் செல்ல செல்ல , கடைசியாக இரண்டாம் ஆண்டு விழா தொடக்கம் சிறிய அளவில் சுமார் 50 மரக்கன்றுகளை கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் சரியாக Zoho நிறுவனத்தில் வெளியே நட்டோம். மன நிறைவான தருணம் அது.

இவ்வாறு தொடர்ந்த பயணம், மார்ச் 2017 க்கு பிறகு பேரிடியாக நின்று விட்டது, 2017 ஆம் ஆண்டு சில தழும்புகளை உடலில் ஏற்படுத்தி விட்டது, தேடல் உள்ள தேனீக்கள் அப்படியே ஓரிடத்தில் நின்று விட்டது. மிகவும் சமாளிக்க முடியாத கால கட்டம், அப்படியே விட்டு விட்டோம். அப்படியே நாட்கள் நகர்ந்தது. ஏன் நமக்கு மட்டும் இப்படி என்று கூட யோசித்தோம்? தேடல் உள்ள தேனீக்கள் குழு அவ்வளவு தானா? நிறைவுக்கு வந்து விட்டோமா? என்றெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் நெஞ்சை துளைத்தன.

அப்போது தான் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்தது. நம்முடன் இருந்த சக உறவுகள் நமக்கு புது ரத்தம் பாய்ச்சினர். குருவின் அருள் பற்றி உணர்ந்தோம்.இதோ நம்முடன் சில மகளிர் அணியினர் சேர்ந்தனர். நாம் வாழும் காலம் கொஞ்சமே..இதற்குள் தேடல் உள்ள தேனீக்களாய் மீண்டும் தேன் தேடி பயணிக்க செய்ய வேண்டும் என்று தோன்றியது.

பெருங்களத்தூர் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் உழவாரப் பணி செய்தோம். அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் நம்மோடு அன்னதானம் செய்ய விரும்பினர், நமக்கு தோளோடு தோள் தந்தார்கள்.
குருவின் அருளினால், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுள் அருள்பாலிக்கும் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை என தொடர்ந்தோம். இது நாள் வரை சேவையில் எங்குமே இடர்ப்பாடு வந்ததில்லை.

அப்படியே ஆன்மிக யாத்திரையாக உழவாரப்  பணியோடு ஓதியப்பர் தரிசனம், சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி யாத்திரை, பாவங்கள் போக்க பாப விநாசம் தரிசனம் என்று மூன்று யாத்திரைகள் மேற்கொண்டோம்.

உழவாரப்பணியைப் பொறுத்த வரை, பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம், மயிலை குழந்தைவேலர் திருக்கோயில், திருமால் மருகன் ஆலயம், துளசீஸ்வரர் ஆலயம், கந்தலீஸ்வரர் கோயில், திருஊரகப் பெருமாள் கோயில் என தொடர்ந்து வருகின்றோம்.

அன்னசேவையும் கூடுவாஞ்சேரியில் ஆரம்பித்தோம், இப்போது தனியாக வண்டியில் வைத்து வேளச்சேரி போன்ற சுற்றுப்புறங்களில் செய்து வருகின்றோம். சென்ற முறை சைதாப்பேட்டை பகுதிக்கு சென்றோம். அன்னசேவையில் நம்மோடு கைகோர்த்துள்ள மலேஷியா அகத்தியர் வனம் குழுவிற்கு நன்றி. மேலும் அன்னசேவையில் உறுதுணையாய் இருக்கும் சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.

அகத்தியர் ஆயில்யம் பூசையும் மாதந்தோறும் மெருகேறி வருகின்றது. முதல் பூசையில் சுமார் 5 நபர்களோடு ஆரம்பித்த பூசை தற்போது சுமார் முப்பது நபர்களுக்கு மேல் வந்து ,தரிசனம் பெரும் அளவிற்கு அகத்தியர் அருள் பாலித்து வருகின்றார்.சென்ற மாதம் நடைபெற்ற மகா குரு பூசையில் உலக மக்கள் இன்புற்று வாழ வேண்டி, 108 விளக்கேற்றி வழிபட்டோம்.இது தவிர , மருதேரி பிருகு மகரிஷி ஆசிரமத்திற்கு நம்மால் இயன்ற சேவையை செய்து வருகின்றோம்.

நம் குழுவின் முக்கிய பணியாக இது நாள் வரை நாம் கை கொள்வது உழவாரமும், அன்னதானமும். இப்போது அகத்தின் ஈசன் வழிபாடும் சேர்ந்து வருகின்றது. இது தவிர அமாவாசை அன்னதானமும் செய்து வருகின்றோம், சென்ற அமாவாசை அன்னதானம் தேனியில் சுமார் 10 உறவுகளுக்கு வழங்கப்பட்டது.

இதோ. நாம் மூன்றாம் ஆண்டில் இந்த பிப்ரவரியில் அடியெடுத்து வைக்கின்றோம். இரண்டாம் ஆண்டு விழாவை நம்மால் இயன்ற ஒரு சிறிய விழாவாக கொண்டாட இருக்கின்றோம். இந்த விழாவில் அகத்தியர் கீதம் ஒலித்தட்டு வெளியீடும், சத்சங்கமும், அன்பர்கள் சந்திப்பும்,கலந்துரையாடலும் உள்ளது.அழைப்பிதழை இணைத்துள்ளோம். அனைவரும் வந்து, விழாவினை சிறப்பிக்குமாறு தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.



தேடல் உள்ள தேனீக்களாய் குழு - TUT இரண்டாம் ஆண்டு விழா & "அகத்தியர் கீதம்" ஒலி குறுந்தகடு வெளியீட்டு விழா


இடம்: சதானந்த சுவாமிகள் ஆசிரமம், பெருங்களத்தூர்
நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1:00 மணி வரை


காலை 9:00    இறை வணக்கம் - திருமதி. ரமா சங்கர்
            9:05    வரவேற்புரை - திருமதி. மாலதி ராஜகுமார்
            9:10    வாழ்த்துரை - திரு.ஹரிமணிகண்டன் அவர்கள், பெருங்களத்தூர்
            9:20    சிறப்பு விருந்தினர் உரை - சிவத்திரு.வேதகிரி அவர்கள்,திருமுறை & திருப்புகழ் சொற்பொழிவாளர்,சைதை   - திருமுறைச்
                       சிந்தனைகள்
            10:30  TUT உழவாரப் பணி பேனர் வெளியீடு - திரு.சு.சுரேஷ் பிரியன் அவர்கள், நால்வரின் பாதையில் (276 திருமுறை பாடல் பெற்ற
                       திருத்தல  யாத்திரைக் குழு )
           10:40  சிறப்பு விருந்தினர் உரை- திரு.K.செல்வக்குமார்  அவர்கள், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை,சின்னமனூர் -
                      தொண்டாற்றி இன்பம் காண்போம்
           11:45  TUT அன்னதானம் பேனர் வெளியீடு - திரு.முல்லைவனம் அவர்கள்,இயற்கை ஆர்வலர் & நிறுவனர், ட்ரீ பேங்க்
           11:50  "அகத்தியர் கீதம்" ஒலி குறுந்தகடு வெளியீடு - திரு.முல்லைவனம் & திரு.சுரேஷ் பிரியன் - முதல் குறுந்தகட்டை பெறுபவர் -
                      செல்வி. சௌமியா
           12:00  அன்பர்கள் அறிமுகம் மற்றும் அனுபவ உரை
           12:30  மரியாதை செய்தல்
           12:45  நன்றியுரை - திரு. R. ராகேஷ்,TUT
            1:00    அன்னம்பாலிப்பு
------------------------------------------------
நிகழ்ச்சி தொகுப்பு: M.R.ரித்திஷ் பரத்
நிகழ்ச்சி ஏற்பாடு : திரு. N.சந்திரசேகரன் & தேடல் உள்ள தேனீக்களாய் குழு - TUT 
மேலும் விபரங்களுக்கு : 7904612352  / 9677267266
இது நாள் வரை நாம் சேவையில் ஈடுபட்ட நிகழ்வின் துளிகளை இங்கே சிறிதாய் இணைத்துள்ளோம்.



 




















இந்த அழகிய தருணத்தில் நம்மோடு உறுதுணையாகவும், உற்றதுணையாகவும் இருந்து வரும் பொருளாதாரம், தள உதவி, உழவாரப்பணி போன்ற நிகழ்வுகளில் உடல் உழைப்பைத் தந்து, நமக்கு ஆக்கமும்,ஊக்கமும் அளிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏற்கனவே சொன்னபடி, இதோ நீதி நெறியோடு 

பயனற்றவை ஏழு 

ஆபத்துக்கு உதவா பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் 
தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் 
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் 
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே 

முந்தைய பதிவிற்கு :

 எங்களின் ஓராண்டு பயணம்..  - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

24 January 2018

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை

இறை அன்பர்களே.
 

பற்பல பூசைகளை கண்டிருக்கின்றோம், கேட்டிருக்கின்றோம். பிரதோஷ பூசை, நித்ய பூசை என தொடங்கி இன்று பரிகார பூசை என்றெல்லாம் பார்க்கின்றோம். அந்த வகையில் இந்த பதிவில் ம(மா)கேஸ்வர பூசை என்பது பற்றி அறிய உள்ளோம். பொதுவாக பூசை என்ற சொல்லிற்கு வழிபாடு என்று பொருள்.  வழிபாடு எப்படியெல்லாம் செய்ய இயலும்? அன்றைய காலத்தில் பூ தொடுத்து வழிபாடு செய்து இருப்பார்கள். பூவைக் கொண்டு இறைவனை வழிபடுவது பூசை என அழைக்கப்பட்டது.

பூ செய்தல், இறைவனுக்கு பூக்கள் கொண்டு வணங்குதல், பூ + செய் = பூசை இப்போது பூசை என்ற சொல்லிற்கு விளக்கம் கிடைத்து விட்டது. நாட்கள் செல்ல,செல்ல வழிபாட்டில் இறைவனுக்கு அபிஷேகம்,அலங்காரம்,யாகம், அன்னதானம் என தொடங்கி விட்டது. ஒவ்வொன்றும் ஒரு விதமான வழிபாடே. அப்படியென்றால் பொருள் உள்ளவர்கள் தான் பூசை செய்து வழிபட முடியுமா? என்றால் இல்லை..அவன் எதிர்பார்ப்பது நம்மிடம் தூய பக்தி ஒன்றைத் தான். 63 அடியார்களில் ஒருவரான பூசலார் பற்றி அறிவோம் அன்றோ? பூசலார்  பொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்
என்று நாம் கேட்டிருக்கின்றோம் ..நாயன்மார்கள், ஆழ்வார்கள் செய்திகள் அனைத்தும் கதைகள் என்று நாம் நினைத்தால் அது மாபெரும் தவறு. இவையெல்லாம் உண்மையில் நடந்த நிகழ்வுகள். 

இறைவனை பூசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், நம்மால் எந்த வித வழிகளில் முடியுமோ, அப்படியெல்லாம் ஆரம்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவாரப்பணியும் பூசையின் தத்துவமே. ஏதோ பார்ப்பதற்கு உடல் உழைப்பை நாம் தருவதாய்த் தோன்றும். ஆனால் உடல் உழைப்பின் மூலம் இறைவனின் உள்ளத்தில் அல்லவா இடம் பிடிக்கின்றோம். ஆயிரமாயிரம் ஆலய தரிசனம் தரும் பலனை சில நூறு உழவாரப் பணி கொடுக்கும் என்றால் அது உண்மையே.

இது போல் எண்ணற்ற பூசைகள் நம் சனாதன தர்மத்தில் காணப்படுகின்றது. இவற்றுள் மிக மிக அரிதாக நாம் கேட்பது  ம(மா)கேஸ்வர பூசை என்ற பூசை. ஏற்கனவே பூசை என்றால் என்ன என்று பார்த்து விட்டோம். இறைவனை வணங்குதல். மாகேஸ்வர பூசை என்றால் என்ன?ஒவ்வொரு உயிரிலும் அந்த ஏக இறைவன்கலந்து இருக்கிறான். ஆகவே ஒவ்வொரு உயிருக்கும் உணவுபடைத்தல் என்பது அந்த இறைவனுக்கே படைத்தலுக்கு சமம். பண்டைய காலத்தில் வாழ்ந்த மகான்கள் சரியாக பகல் 12 மணிக்கு அன்றைய உணவை எடுத்துக் கொள்வார்கள். அது அந்த இறைவனுக்கு படைக்கும் அமுது ஆகும்.உயிர்களுக்கு சரியாக 12 மணி அளவில் உணவிடுதல் என்பதே மாகேஸ்வர பூசையின் நியதி ஆகும்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வகுத்தளித்த மயூர வாகன விழா நிறைவு பகுதியாக மாகேஸ்வர பூசையை கண்டிப்பாக நடை பெற வேண்டும்..இது சுவாமிகள் ஏற்படுத்திய கட்டளை...இந்த மாகேஸ்வர பூசை நிகழாமல்இந்த விழா நிறைவு பெறுவது இல்லை என்று சுவாமிகள் சாசனம் எழுதி ஆவணப்  படுத்தி இருப்பதன் மூலம் இதன் முக்கிய தன்மையைநாம் புரிந்து கொள்ளலாம்..ஓம் குமாரகுரு தாச குருப்யோ நம என்று தான் நாம் விழைகின்றோம். பாம்பன் சுவாமிகள் சொல்லி இருக்கின்றார் என்றால் அந்த முருகப் பெருமானே சொல்லியதற்கு சான்றாகும்.

இன்னும் சற்று விளக்கமாக காணலாமா? மகேஸ்வரன் - ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள் கொள்ளலாம். மகேஸ்வரன் அல்லது மாகேஸ்வரன் என்றால் இந்த உலகம் முழுவதையும் தன்னுள் உடையவன். இங்கு தான் பக்தியில் இருந்து அதன்  உச்ச நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அந்த மகேஸ்வரன் எங்கும் நிறைந்து இருக்கின்றார்.  ஆதியும் அந்தமும் அற்ற அந்த  ம(மா)கேஸ்வரன் அடியார்களில் ஒடுங்கி நிற்கின்றார். அதனால் தானே அடியார் பெருமை சொல்ல பெரிய புராணம் பிறந்தது. அடியார்களுக்கு அடியார்களாகிய விளங்கும் இவர்களுக்கு செய்யும் பூசையே  ம(மா)கேஸ்வர பூசை.

பூசைகளில் சிறந்த பூசை சிவ பூசை. பேச்சு வழக்கில் கூட நாம் கேட்டதுண்டு. சிவ பூசையில் கரடி புகுந்ததென? அத்தகைய சிவபூசை செய்தால் நமக்கு சிவ புண்ணியம் கிடைக்கும். இந்த சிவ பூசை பல வழிகளில் செய்யப் படுகின்றது. அதில் மிக மிக உயர்வானது  ம(மா)கேஸ்வர பூசை. ஆம் ! பெறுபவர்கள் இருந்தால் தானே கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். பெறத் தகுதியான அடியார்களுக்கு பூசை செய்வதே இது.



இந்த மகேஸ்வர பூசை எப்படி செய்வது என்று இனி பார்ப்போம்? இறை அடியார்களை மகேஸ்வரர்களாக பூசித்து அவர்களுக்கு சரியாக 12  முதல் 1 மணி அளவில் அன்னம்பாலிப்பதே ஆகும். மகேஸ்வர பூஜை ஸ்தோத்திரம் இதோ .



பண்டைய காலத்தில் சிவனடியார்களுக்கு உணவு படைத்துவிட்டுத் தான் வீட்டில் உணவு உண்பார்கள். அப்பொழுதுகளில் வீட்டிலே இந்த மகேஸ்வர பூசை இயல்பாக நடைபெற்றது. சரி ! இன்றைய சூழலுக்கு வருவோம். அடியார்களைக் கண்டவுடன், அவர்களை மகேஸ்வரர்களாக கண்டு, முதலில் அவர்ளின் பொற் பாதம் வணங்க வேண்டும். அவர்களின் சாதி,குலம் ,மதம் ஆராயாமல், இருப்பார், இல்லாதார் என்று நோக்காது, திருநீறும், கண்டமணியும் அணிந்து இருக்கும் அவர்களை மனிதர்களாக எண்ணாது, சிவனாராக பாவிக்க வேண்டும். சிவனைப் பார்த்தால் நம்மால் சும்மா இருக்க முடியுமா? உள்ளே அன்பு ஊற்று பொங்க வேண்டாமா? அந்த அன்பைக் கொண்டு, அவர்களை அகம் மலர்ந்தும், முகம் மலர்ந்தும் வரவேற்க வேண்டும். இனிமையாக பேச வேண்டும்.

அவர்களை வசதியாக அமர வைத்து, பூசைக்கு உகந்த நீரைக் கொண்டு, அவர்களின் திருவடியில் பாத பூசை செய்து, அந்த தீர்த்தத்தை நம் சிரசில் தெளிக்க வேண்டும், பின்பு அவர்களின் திருவடியில் உள்ள தீர்த்தத்தை சுத்தமான ஆடையினால் ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை மலர்களால் பூசித்து, தூப தீபம் காட்டி, அவர்களின் பாதம் தொட்டு வணங்க வேண்டும். அறுசுவை உணவு என்று சொல்லப்படும் இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு,கசப்பு,கார்ப்பு,உவர்ப்பு சுவை உணவுகளை உண்டு,தின்று,நக்கி,பருகி என்றவாறு படைக்க வேண்டும். இதன் பின்னர் நாம் பிறவிப் பயன் இன்றல்லவோ பெற்றேன் ! என்று அவர்களிடம்  பிரார்த்திக்க வேண்டும்.

பிரார்த்தனை முடித்து அவர்கள் விடை பெற்று செல்லும் போது, பதினான்கு அடி தூரம் சென்று வழி ஏற்றி வர வேண்டும். இப்படி செய்வது தான் மகேஸ்வர பூசை. இந்த மகேஸ்வர பூசையை சைவ ஆகம விதிப்படி தினமும் செய்து, எம் பெருமான் திருவடி அடைந்தவர் இளையான்குடியில் பிறந்த மாறனார்.
இதோ அவரைப் பற்றி அறிவோம், உழவுத்தொழிலில் வந்த பெருஞ் செல்வமும், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் உடையவராய்த் திகழ்ந்தார். சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறி வரவேற்று அவர்களுக்கு உணவளிப்பார். நாள்தோறும் செய்த மாகேசுவரபூசை என்னும் சிவபுண்ணியத்தால் அவரது செல்வம் நாளுக்குநாள் பெருகிக் குபேரனைப்  போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார்.

அடியார்க்குத் தொண்டு செய்தல் ஒன்றே தம் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து வந்தார்.அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்யவல்லார் இந்நாயனார் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இதனால் இளையான்குடிமாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும்,  தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.

சிவ பெருமானின் அருள் உணர்த்த நடந்த நிகழ்வு இதோ.இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாறனாரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று இருத்தற்கு இடங்கொடுத்தார்; அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தம் மிகுந்தது. அன்றையப் பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல் வீட்டின் சிதலமடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து மாறனாரும் அவரது துணைவியாரும் சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான் சோதிப்பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு மாறனாரும் மனைவியும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, ‘அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக’ என்று அருள் செய்து மறைந்தருளினார்.

இத்தகு சிறப்புமிக்க மகேஸ்வர பூசை செய்ய நாம் திருஅண்ணமாலையில் உள்ள  ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும். அங்கு தினமும் மதியம் நடைபெறும் மகேஸ்வர பூசை வேறெங்கும் காணக் கிடைக்காத ஒன்று. சரியாக 12 மணி அளவில் அடியார்களை அழைத்து, வசதியாக அமர வைக்கின்றார்கள். சுமார் 70 அடியார்களுக்கு மேலாக நாம் காண முடியும், அங்கு சைவம், வைணவம் என்று பேதமில்லை, அனைவரும் அமர்ந்த பிறகு, உபாயதாரரை அழைத்து, பூ, வெத்தலை, பாக்கு , காணிக்கை என்று ஒவ்வொருவருக்காக கொடுத்து, ஆசி பெற சொல்வார்கள். ஒவ்வொரு சிவனாரிடமும் வணங்கி, காணிக்கை கொடுத்து, அவர்களின் பொற் பாதம் தொட என்ன புண்ணியம் செய்தனை நன்னெஞ்சே!

பின்பு  ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தின் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் ஒவ்வொரு சிவனாரிடம் வந்து தூப தீபம் காட்டுவார், அந்த நிலையில் நாம் மனம் ஒன்றி ஒவ்வொருவரிடம் இறையை உணர முடியும். தூப தீபம் காட்டிய பிறகு, அன்னம்பாலிக்க ஏற்பாடு செய்யப்படும், அனைத்து அடியார்களும் ஒரு சேர சிவ துதிகள் பாடுவார்கள். மீண்டும் ஒருமுறை நாம் அனைவரையும் பார்த்து, நாம் செய்த ஆணவம்,கன்மம், மாயை என்ற மும்மலங்கள் இன்றோடு இங்கே தொலைக்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரின் ஆசி வேண்டுகின்றோம் என்று நம் உடல் முழுதும் இப்புவியில் விழும்படி வீழ்ந்து,வணங்க வேண்டும்.

அந்த ஆசியினைப் பெற்ற பிறகு, அவர்கள் அமுதினை உண்பார்கள், அடுத்து அவர்கள் அமுதுண்ட வாழையிலையை நாமே எடுத்து அவர்களிடம் நன்றி சொல்லி விடை பெற வேண்டும். இவ்வாறு தான் இங்கே மாகேஸ்வர பூசை செய்யப் படுகின்றது. உணவில் நேர்த்தி, அடியார்களிடம் அன்பும் கருணையும் என்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து இங்கே செய்கின்றார்கள். இதோ அந்த காட்சிகள் இங்கே உங்கள் பார்வைக்கு.




















மகேஸ்வர பூசை எங்கு செய்தாலும் சிறப்பு..அதுவும் அக்னி லிங்கம் உறைந்திருக்கும், சித்தர்கள் வாழும் திருஅண்ணாமலையில் செய்வது மிகச்சிறப்பே.

இங்கே  ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில்  மதியம் மகேஸ்வர பூசை நடைபெறுகின்றது, அதற்கடுத்து காலையிலும், மாலையிலும் அன்னசேவை செய்து வருகின்றார்கள். காலையில் சுமார் 50 பேர் அளவிற்கு உணவு தயாரித்து, கிரிவல பாதையில் சென்று விநியோகம் செய்கின்றார்கள். நாம் நமது AVM அன்னதானத்தை இந்த மாதம் இங்கே தான் செய்தோம்.




இரவிலும்  சுமார் 150 பேருக்கு அன்னதானம் செய்கின்றார்கள், அப்போது கிரிவல பாதை மட்டுமின்றி, திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் செய்கின்றார்கள் என்பது தனிச்சிறப்பு.இந்த பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில்  ஸ்ரீ தயவு சித்தாஸ்ரம சேவையில் இணையும்படி நம் தளம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு:
 
ஸ்ரீ சரவணபவா சுவாமிகள், ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)
 எப்படி முடிப்பது இந்தப் பதிவை ? வேறெப்படி?

    “இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் - திருத்தொண்டத் தொகை".